கசப்பும் வெறுப்பும்
சகோ. சாம்சன் பால்
Words and Word of God

ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள்..  கலா – 5:15

இன்று பெரும்பாலான வாலிபர்கள் வன்முறையை விரும்புகிறவர்களாகவும், தவறான விஷயங்களில் துணிச்சல் மிக்கவர்களாகவம் விளங்குகின்றனர். அமைதியான ஒரு வாழ்க்கையை அவர்கள் விரும்பாமல், பரபரப்பான பிரச்சனை ஆரவாரங்களுக்கு நடுவில் இருப்பதையே விரும்புகின்றார்கள். வெறுப்பு, விரோதம், கசப்பு, பகமை, பழிக்குப்பழி வாங்கும் மனப்பான்மை ஆகியவற்றைச் சார்ந்து செயல்படுவதை ஒரு ஹீரோயிஸம் என்றும், தாழ்மை, பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை ஆகியவற்றோடு வாழ்வது கோழைத்தனம் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் வாலிப வயதுகளைக் கடக்கும் நேரம் வரும்போது தாங்கள் எவ்வளவு தவறாக வாழ்ந்துவிட்டோம் என்று உணர்ந்து வருந்துகிறார்கள். ஆயினும் அதற்கு முன்னரே வாழ்க்கை பலவிதங்களில் வீணாகிப் போகின்றது. சிலர் தவறுகளை உணர்ந்து சரி செய்ய விரும்பினாலும் அது காலதாமதமாகிப் போன ஒரு ஞானமாக மாறி விடுகிறது.
 
வாலிப உள்ளங்களில் கசப்பும், கோபமும், வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் எளிதாகக் குடிகொண்டு விடும். அவைகளை உள்ளங்களில் தங்கவிடாமல் தடுப்பதும், அவைகளை விலக்குவதும் ஒரு வாலிபனால் எளிதாக இயன்ற காரியமல்ல. அந்த இருதயதம் தேவ உறவினாலும், ஆளுகையினாலும் பக்குவப்படுத்தப்பட வேண்டும்.
 
சவுல் செய்த அக்கிரமங்களை வாலிபனாகிய தாவீதின் இருதயத்தை எளிதாக கசப்பினால் நிரப்பக் கூடியவையே. ஆனால் தாவீது தேவ உறவுடன் வாழ்ந்ததால் அதனைத் தனக்குள் தங்கவிடாமல் தடுக்க முடிந்தது. அவன் அந்த மனநிலையைக் காத்துக் கொண்டதால் தேவன் அவனைச் சிங்காசனத்தில் அமர்த்தி அழகு பார்க்க முடிந்தது. வாலிபனே, உன்னுடைய இருதயம் தவறான குணங்களால் தரங்கெட்டு, உன் வாழ்க்கை வீணாகும் முன்பு இயேசுவின் உறவை நாடி அமைதியான ஒரு வாழ்க்கை வாழ விரைந்து வருவாயா!.

உன்னை எதிர்க்கும் ஒரு சிலர் அவசியமே.
இல்லையெனில் உனக்கே நீ  எதிரியாகி விடுவாய்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.