Monday March 24 2025
பரலோகமே நம் சொந்தமே
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்
யோவான் 14:2-3
ஒரு வயதான கணவனும் மனைவியும் திருமணமாகி 55 வருடங்கள் கழிந்து, ஒரு நாள் ஒரு காரில் செல்லும்போது, விபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே மரித்து போனார்கள். கடைசி பத்து வருடங்கள் மனைவி இருவருடைய உடல்நிலை குறித்து மிகுந்த சிரத்தை எடுத்தபடியினால், இருவரும் நல்ல சுகத்துடன் இருந்தனர்.
அவர்கள் மரித்து பரலோகம் சென்றவுடன், பரிசுத்த பேதுரு அவர்களை அவர்களுடைய வாசஸ்தலத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கு ஒரு பெரிய சமையலறை, பெரிய புதிய மாடலில் கட்டப்பட்ட அறைகள் எல்லாவற்றையும் காட்டியவுடன் கணவர் மிகுந்த ஆச்சரியப்பட்டு, அது எவ்வளவு விலையாகும் என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு, 'இது பரலோகம், எல்லாமே இலவசம்' என்றார். பின்னர், அவர் அவர்களை சாப்பிடும் இடத்திற்க்கு கூட்டி சென்றபோது, அந்த கணவர் அங்கிருந்த உணவு வகைகளை பார்த்துவிட்டு, 'நான் எவ்வளவு சாப்பிடலாம்' என்று கேட்டார், அப்போது பரி.பேதுரு, 'நான் தான் சொன்னேனே, இது பரலோகம், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், கணக்கே இல்லை' என்று கூறினார். அப்போது அந்த கணவர், 'கொலஸ்ட்ரால் மாத்திரை, சர்க்கரை மாத்திரை இங்கு உண்டா?' என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு, 'இங்கு சாப்பிட்டால் உடலும் பெருக்காது, கொலஸ்ட்ராலும் பெருகாது, எந்த வியாதியும வராது' என்று கூறினார்.
அதை கேட்ட கணவர், மிகவும் கோபமுற்றவராக, தன் தலையில் இருந்த தொப்பியை கீழே போட்டு, மிதித்து, காலை தரையில் ஓங்கி அடித்தார். அப்போது பரி.பேதுருவும் மனைவியும் அவரை சாந்தப்படுத்தி 'என்ன என்னவாயிற்று' என்று கேட்டபோது, அவர் கோபமாக, தன் மனைவியை பார்த்து, 'எல்லாம் உன்னால் வந்தது, நீ மட்டும் அந்த சாலட்டையும், கொழுப்பு சக்தியில்லாத (Fat Free Food) உணவையும் கொடுக்காதிருந்தால், பத்து வருடத்திற்க்கு முன்பே நான் இங்கு வந்து எல்லாவற்றையும் அனுபவித்திருப்பேன்' என்று கூறினார்.
நாம் மாத்திரம் பின்னால் வரப் போகும் சுதந்திரத்தை அறிந்திருந்தால் இப்போது நடக்கும் எந்த காரியத்தை குறித்தும் கவலைப்பட மாட்டோம். ஆனால் நாம் காண்கின்ற காரியங்கள்தான் நிரந்தரம் என்று நினைத்து அவைகளையே உறுதியாய் பற்றி கொண்டிருப்பதால், கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பல அரிய காரியங்களை அறியாமல் இருக்கிறோம்.
'நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்' என்று இயேசுகிறிஸ்து வாக்குதத்தம் பண்ணிவிட்டு சென்றிருக்கிறார். நாம் எண்ணுவதற்கும் நினைப்பதற்கும் மேலான இடம் நமக்கென்று வைக்கப்பட்டடிருப்பதை நாம் உணர்வதில்லை.
'அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது' - (1 பேதுரு 1:4,5)
இந்த உலகத்தின் ஆஸ்திகள், சொத்துபத்துக்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து போகிறதாக இருக்கிறது. ஆனால் நமக்கென்று ஆயத்தமாக்கப்பட்டடிருக்கிற அந்த பரலோக பவீட்டிலே நம்முடைய சுதந்திரம் அழியாததாக, மாசற்றதாக எப்பொதும் நித்திய நித்தியமாக சந்தோஷமாய் நாம் வாழும்படியாக நமக்கென்று வைக்கப்பட்டிருக்கிறது.
பரலோகத்தை குறித்து நாம் பேசினால் பேசி கொண்டே போகலாம். அந்த அற்புத பரலோகத்தின் ஒரு சிறு பகுதியை நாம் வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தில் காணலாம். 'நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை' - (வெளி 21:23-25). அங்கு வியாதி இல்லை, கண்ணீர் இல்லை, மரணம் இல்லை, துன்பம் இல்லை, துயரம் இல்லை, மரணம் இல்லை, பசி இல்லை, பாவம் இல்லை, ஜாதி மத பேதம் இல்லை, குழப்பம் இல்லை. நம் தேவாதிதேவன் அங்கு இராஜாதி இராஜாவாய் வீற்றிருப்பார். நாம் அவரை தரிசித்தவர்களாக, அவரை துதித்து துதித்து, நித்திய நித்தியமாய் அவருடன் வாழுவோம். ஆமென் அல்லேலூயா!
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம்
நாம் வாஞ்சிக்கும் நாடாம்
பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி
ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம் நீர் எங்களுக்காக ஆயத்தப்படுத்தியவைகளை கண்கள் காணவுமில்லை, காதுகள் கேட்கவுமில்லை. அத்தனை அற்புதமான இடத்தை எங்களுக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற உம்முடைய அன்பிற்காக நன்றி தகப்பனே. அங்கு நாங்கள் வந்து வாழும்படியாக எங்கள் வாழ்க்கை அதற்கேற்ற தகுதியுள்ளதாக இருக்கும்படியாக எங்களை ஆயத்தப்படுத்தும். அந்த அற்புத பரலோகத்தை எங்களுடைய சுதந்தரமாக நீர் கொடுக்கப்போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
இன்றைய நாளுக்கான இப்பகுதி அனுதின மன்னா குழுவினரால் எழுதப்பட்டது. இவர்களை தொடர்புகொள்ள anudhinamanna@gmail.com என்ற முகவரியில் அனுகலாம்.