தேவனின் திட்டம் நிறைவேறுவதற்கு பரலோக தேவன் ஓர் தாயையும் இயேசுவை வளர்ப்பதற்கு ஓர் வளர்ப்பு தகப்பனையும் தேடிக் கொண்டிருந்தார். தேவன் கண்டுபிடித்த தாய் மரியாள். அவர் கண்டுபிடித்த வளர்ப்புத் தகப்பன் யோசேப்பு. தேவனது நம்பிக்கைக்குப் பாத்திரமான இந்தக்குடும்பம் ஓர் எளிய குடும்பம். இந்த தாயையும் தகப்பனையும் தேவன் நம்பினதின் இரகசியம் அறிய கீழே வாசியுங்கள்.
தேவ திட்டத்தைச் சுமந்த தாய்!
“மரியாள்” என்றால் “கண்ணீர்” என்று அர்த்தம்! இந்த பெண் மூலம் தேவன் தனது சொந்த குமாரனை பெற்றெடுக்கும் பாக்கியத்தைத் தந்தாரே! என்னென்ன காரியங்களை மனதில் கொண்டு, தேவன் தீர்மானித்தாரோ? தெரியவில்;லை. ஆனால் வெளிப்படையான இரகசியங்களில் சில இதோ:
சரித்திர ஆசிரியர்கள் ‘மரியாள் ஒர் இளம் வாலிபப் பெண்ணாக இருக்கக்கூடும்’ என்கிறார்கள். இந்த இளம் வாலிப வயதில் ‘கண்ணீர்’ என்று அர்த்தம் கொண்ட கன்னிகையோடு “கர்த்தர் இருக்கிறார்” என்ற உண்மையை ஞாபகப்படுத்த தேவனுடைய தூதன் காபிரியேல் அனுப்பப்பட்டார். எத்தனை பெரிய ஆசீர்வாதம்!
அன்பு வாலிபரே! தகப்பனே! தாயே! இந்த வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் உங்களோடு இருக்கிறாரா? உங்கள் பாவங்கள் மன்னிக்கப் படாமல் இருக்குமேயென்றால் அவர் அளிக்கும் மன்னிப்பை முதலில் பெற்றுக்கொள்ளுங்கள். இதுதான் உலகத்திலே உன்னத அனுபவம். உங்கள் வாழ்வு அமைதியற்று காணப்படுகிறதோ? அலசடி பட்டுக்கொண்டிருக்கிறீர்களோ? அமைதியற்று இருக்கிற வாசகர்கள் யாராவது இதை வாசிப்பீர்களென்றால், நீங்கள் தேடும் அமைதி, வேத புத்தகத்தின் தேவன் தருகிறார். அவர் ஒருவர்தான் இரட்சகர்! இரட்சிப்பு வேறு யார் மூலமும் அருளப்படவில்லை.
இளம் வயது! சாதாரண குடும்பம்! ஆனால் தேவாதி தேவனோடு வாழ்ந்த பெண்மணி. வாலிப தம்பியே தங்கையே! வாழ்க்கையில் இதுவரை இந்த உன்னத அனுபவத்தை நீ பெற்றிராவிட்டால், இன்றே உன் அறைக்கதவை பூட்டி உனது கடந்தகால பாவங்களை தேவனிடம் ஞாபகப்படுத்தக்கேள். உன்னுடைய பாவத்திற்காக மரித்தவர் இயேசு என்பதை விசுவாசி. உன் பாவங்களை ஒத்துக்கொள். அறிக்கை செய்துவிட்டு விடு!
பல பெண்கள், அந்நாட்களில் ‘மேசியா தன் வயிற்றில் பிறக்கமாட்டாரா? என்று ஏங்கிக்கொண்டிருந்த காலம். இந்த பெரிய பாக்கியம் மரியாளுக்கு அளிக்கப்பட்டது!
மரியாள் ஓர் கன்னிப்பெண்! புருஷனை அறியாதவள்! தேவ தூதன் அவளிடம் சொன்னது புதிய அனுபவமே! வயிற்றில் பிறக்கப் போகிற குழந்தை தேவ குமாரன்! அவள் உள்ளத்தில் எத்தனை கலக்கம்! தூதன் “தேவனால் கூடாதது ஒன்றுமில்லை”, என்றாள். தேவதூதன் கடந்து சென்றான். ‘அவள் இனத்தாளாகிய எலிசபெத்து முதிர் வயதில் கர்ப்பம் தரித்துள்ளாள் அவளுக்கு அது ஆறாம் மாதம்.’ இதற்கு மேலும் மரியாளுக்குப் பேச வார்த்தை இல்லை. புருஷனை அறியாத பெண், குழந்தை பெற்றெடுத்தால் ஊர் உலகம் தூற்றும்! மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறிந்து கொல்வார்கள்! ஆனாலும், மரியாள் “நான் ஆண்டவருக்கு அடிமை” என்றாள்.
“அடிமை” என்றவுடன் பரலோகமே மகிழ்ந்திருக்கும்! தேவனுக்காக தன் கன்னிப்பிராயத்தை தியாகம் செய்தாள் மரியாள். எத்தனையான விசுவாசம்.
அருமை நண்பரே, தாங்களும் தேவனுடைய வார்த்தைக்குச் “சரி” என்றும், “அடிமை” என்றும் சொல்லிப்பாருங்கள். தேவன் உங்களையும் நடத்துவார்.
இந்த மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தாள். வளர்த்து ஆளாக்கினாள். சிலுவை பரியந்தம் கூடவே சென்றாள். அவர் மரித்து உயிர்தெழுந்த பின்னும், மேல் அறையில் காத்திருந்தாள். மரியாளின் மற்ற ஆண் பிள்ளைகளின் பெயர்களும் வேத புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இயேசுவை விசுவாசித்து, ஆதி திருச்சபையின் தூண்களாகி, தேவனை மகிமைப்படுத்தினர்.
இந்த மரியாள் “கிருபை” பெற்றவள். ஆனால் சாதாரண ஒரு ஸ்திரியே. மரித்து நியாயத்தீர்ப்பிற்கென்று காத்திருக்கிறாள். மரியாள் கடவுள் இல்லை! கிருபை பெற்ற ஒரு பெண்! அவ்வளவுதான். வணங்கப்படத்தக்க தெய்வம் அல்ல. இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுத்து வளர்த்து இவ்வுலக இரட்சகராக சிலுவைக்கு அனுப்பி தேவபங்கை நிறைவேற்றினாள்.
தேவன் தான் நம்பின மரியாளையும், யோசேப்பையும் நடத்தினார். உங்களையும் தேவன் நடத்துவதற்கு ஒப்புக் கொடுங்கள்!