மூளையும் இருதயமும்
அறிவு மூளையோடு சம்பந்தப்பட்டது. கல்வி அந்த மூளையைத்தான் கூர்மையாக்கும். ஒழுக்கம் இருதயத்தோடு சம்பந்தப்பட்டது. அந்த இருதயத்தை தேவன் தொட்டால்தான் அங்கே பண்புகளும் ஒழுக்கங்களும் ஏற்படும். யோசேப்பு, தாவீது, யோசுவா போன்றோர் பெரிய அறிவாளிகளோ, கல்வி கேள்விகளில் சிறந்தவர்களோ அல்ல. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். ஏனென்றால் இளம் வயதுகளில் தங்கள் இருதயங்களில் தேவனை ஏற்றுக்கொண்டு, தேவனால் அவர்கள் தொடப்பட்டார்கள். எனவே அவர்கள் பண்புநிலையில் சிறந்து வாழ்க்கையில் மேன்மைகளையும், மகிமைகளையும் கண்டார்கள்.
மூளை வளத்தைக்கொண்டும், அறிவின் மிகுதியைக் கொண்டும், கல்வி ஞானத்தைக் கொண்டும் சிகரங்களுக்கு செல்லலாம். ஆனால் அங்கிருந்து விழாமல் அமைதியும், சந்தோஷமும், மேன்மையும், நம்பிக்கையும் மிகுந்த ஒரு வாழ்க்கையை காணவேண்டுமானால் நல்ல பண்புகளை வளர்த்துக்கொண்ட ஒரு இருதயம் வேண்டும்.
மனிதன் மூளையினால் உயருகின்றான். ஆனால் இருதயத்தினால்தான் வாழ்கின்றான். உயர்ந்து நிற்கும் பலர் வாழ்க்கையை வாழவில்லை. ஏனென்றால் அவர்கள் இருதயத்கைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த இருதயத்தை ஒழுங்கற்றதாகவும், ஒழுக்கமற்றதாகவும் விட்டு விட்டு மூளையைக் கொண்டு மட்டுமே வாழ்வை அனுபவிக்கலாம் என்பது பகற்கனவே.
வாலிப நாட்களிலே சிருஷ்டிகரை நினை என்ற ஆலோசனையை வேதத்தில் பார்க்கின்றோம். (பிரசங்கி – 12:1) எதற்காக? அவரால்தான் இருதயத்தை ஒழுங்குபடுத்தி வாழ்க்கையை ஒழுக்கமுள்ளதாக மாற்றமுடியும். கல்வி மட்டும் போதாது. கர்த்தர் இருதயத்தில் வேண்டும். கோடி கோடியாக சேர்த்தாலும் ஒழுக்கமில்லாத வாழ்க்கையில் அவைகள் கேடுகளாகவே மாறுகின்றன.
வாலிப வயதுகளில் ஒழுக்கமுள்ள ஒரு வாழ்க்கைக்கு வித்திடாமல், பின்னர் ஒழுங்குமிக்க ஒரு வாழ்க்கையை காண முடியாது. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுப்பதில் முனைப்புடன் இருக்கிறார்கள். ஒழுக்க முறைகளை கொடுப்பதிலோ மிகவும் பின்தங்கியுள்ளார்கள். இன்றைய வாலிபர்கள் கல்வித் தகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றார்கள். ஆனால் ஒழுக்கம்தான் வாழ்வின் தகுதியை நிர்ணயிக்கின்றது என்பதை அறியாமல் போகின்றார்கள்.
ஆம். அன்பான வாலிப வயதினரே இருதயம்தான் உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது. அந்த இருதயத்தில் ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்ள பிரயாசப்படுங்கள். வெறும் கல்வியை நம்பி பின்னாட்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். ஆனால் ஒழுக்கங்களை உருவாக்குவதும் வெற்றியடைவதும் எளிய விஷயங்கள் அல்ல. இந்த பாவ உலகத்தின் ஒழுக்கமற்ற பெருங்காற்றின் விசைகளை எதிர்த்து நிற்பது சுலபமானதல்ல. பாவத் தன்மையுள்ள இருதயத்தில ஒழுங்கு முறைகளையும் ஒழுக்கமுறைகளையும் நிலைநாட்டுவது சாத்தியமானதல்ல.
இதனை சாத்தியமாக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை அழைக்கின்றார். அவரால் இருதயத்தின் பாவம் அகற்றப்பட்டு பரிசுத்தம் ஏற்படுத்தப்பட்டால்தான், ஒழுக்கமான ஒரு வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்க முடியும். இருதயத்தில் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு, ஒழுங்குகளும் ஒழுக்கங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கையை உருவாக்குங்கள். அதன் விளைவாக உங்கள் எதிர்காலங்கள் பிரகாசமும், அமைதியும், சந்தோஷமும், அர்த்தமும் நிறைந்ததாக மாறும்.