முயற்சி செய்யுங்கள்
எதையும் முயற்சிக்கும் முன்னரே முடியாது என்று கூற அவசரப்படாதிருங்கள். பல விஷயங்கள் செய்யப்படாமல் போனது முடியாததால் அல்ல, முயற்சிக்காததாலே. பல காரியங்கள் சாதிக்கப்படாதது அது சாதிக்க இயலாது என்பதால் அல்ல, அதனை சாதிக்கும் மன ஆர்வம் இல்லாததாலேயே.
ஆக்கப்பூர்வமாயிருங்கள்
கனவுகள் அவசியம். கற்பனைகள் அவசியம். ஆனால் ஒரு அரண்மனையை கட்டுவது போல கனவு கண்டு கொண்டு இருப்பதைவிட, ஒரு குடிசையைக் கட்ட ஆக்கப்பூர்வமாக செயல்படுவதே மேன்மை.
படிப்படியாய் முன்னேறுங்கள்
ஒவ்வொரு படியாக உயர்வதே உண்மையான உயர்வு. செய்தால் அந்த தொழிலைத்தான் செய்வேன். சேர்ந்தால் இத்தனை ரூபாய் சம்பளத்தில்தான் சேர்வேன், படித்தால் இந்த படிப்பைத்தான் படிப்பேன், என்று உயர்நிலைகளை மட்டுமே குறிவைக்காதிருங்கள். படிக்கட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக மிதித்து முன்னுக்கு வரவேண்டும். விரும்பிய நிலையை அடைவதற்கு முன்பு, இப்போது ஆயத்தமாயிருக்கிற சிறு நிலையை விரும்பி ஏற்கப் பழக வேண்டும்.
பொறாமையை விலக்குங்கள்
பொறாமை ஒரு பிறவிக்குணம். பிறர் முன்னுக்கு வந்து விட்டார்களே என்று பொறாமைப்படுகிறவன் இன்னும் பின்னாலேயே போய்க் கொண்டிருப்பான். பிறரிடம் உயர்வைக் கண்டு மனதில் எரிவது அல்ல. எனக்குமட்டும்; அது ஏன் கிடைக்கவில்லை என்று கஷ்டப்படுவது அல்ல. அது போல உயர்வதற்கு விரும்பி உருப்படியான வழிகளை யோசித்து செயல்படவேண்டும்.
இழப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்
தென்னை மரத்திலிருந்து மட்டைகள் விழுந்து கொண்டேயிருப்பது தவறு அல்ல. அது உயராமல் நின்றுவிட்டதா, காய் காய்க்காமல் போய்விட்டதா என்பவைகளைத்தான் கவனிக்கவேண்டும். முன்னேறிக் கொண்டேயிருக்கும் பாதையில் சில நஷ்டங்கள் இழப்புகள், ஏற்படுவது சகஜம் மட்டுமல்ல. அவைகள் அவசியம். எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் பெற முடியாது.
தோல்விகள் தேவையே
வாழக்கையில் தோல்விகளைக் காண்பது நஷ்டமல்ல. தோல்விகளே இல்லாமல் தொடர்ந்து வெற்றிகள் பெறுவதுதான் பின்னால் கஷ்டங்களைக் கொண்டுவரும். கோலியாத்தை வென்று முதல் அடியிலேயே சாதனை படைத்த தாவீதுக்கு பல தோல்விகள் பின்னர் தொடர்ந்து வந்தது. அதனை தேவன் அனுமதித்தார். ஏனென்றால் தோல்விகளைக் கண்டு பாடம் கற்றுக் கொள்ளாதவன், வெற்றிகளைக் கண்டாலும் அதில் வெற்றியாய் தொடர முடியாது.
அளந்து சாப்பிடுங்கள்
வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதிப்பது நல்லதல்ல. ஆனால் சம்பாதிப்பதற்கும் அதிகமாக வாய்க்கும் வயிற்றிற்கும் செலவழிப்பது விவேகமல்ல. நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கணக்கிட்டு விடுவார்கள். அறிவாலும், புத்தியாலும், நல்ல போதனைகளாலும் பிறர் பார்வையில் உயர்ந்து நிற்கின்ற பலர், சாப்பாட்டு மேசையின் அருகில் பலருடைய கண்களுக்கு மிகவும் குறைந்தவர்களாக மாறிப்போய் விடுகின்றார்கள்.