Home
Family
Walking With God
Prayer Requests
Songs
 
Prayer Request 

வெற்றியான வாழ்க்கைக்கு தேவையானப் பழக்கங்கள் ( பாகம் : 2 )
சகோ. சாம்சன் பால்
Reaching out people

பொறுப்புடன் செய்யுங்கள்
நீங்கள் எந்த வேலையை அல்லது பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் நேர்த்தியாக, சரியாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் நல்லெண்ணமும் ஏற்படும் விதமாக செய்யுங்கள். பொறுப்புடனும், நேர்த்தியுடனும் செய்யாதவர்களை நம்பி பிறர் நல்ல பொறுப்புகளைத் தருவது கடினம்.

பொறுமையுடன் கேளுங்கள்
பிறர் பேசுவதைக் கேட்காமலே பேசிக் கொண்டிராதிருங்கள். பிறர் பேசும் சமாச்சாரம் உங்களுக்கு தவறாகத் தோன்றினாலும், சரியற்றது போல உணர்ந்தாலும் சற்று பொறுமையாகக் கேளுங்கள். அவர் சொல்லி முடிக்கட்டும். பேசவிடாமல் பேசுகிறவர்களை யாரும் பெரியவர்கள் என எண்ணமாட்டார்கள்.  பேச வந்துவிட்டதை எண்ணி கசக்காமல் இனிமையாக பதில் கொடுங்கள்.

வேகமாய் செயல்படுங்கள்.
நீங்கள் செயல்படும்போது இதைவிட சற்று வேகமாக உங்களால் செயல்பட முடியதா என யோசியுங்கள். நீங்கள் செயல்பட்டுக் கொண்டேதானிருக்கிறீர்கள். ஆனால் இன்னும் சற்று சுறுசுறுப்போடும் செயல்திறனோடும் செயல்பட்டால் பிறரை அது கவரும் என்பதை மறவாதிருங்கள்.

நன்றாக தூங்குங்கள்
நன்றாக தூங்கிவிட்டு செயல்படுங்கள். அல்லது செய்து முடித்துவிட்டு தூங்குங்கள். தூங்கி வழிந்து கொண்டு செயல்படுகிறவர்களை யாரும் விரும்ப மாட்டார்கள். போதிய அளவிற்கு தூங்காமல் தூக்க நேரத்தை ஒரு போதும் மிச்சப்படுத்தாதிருங்கள். தூக்கக் குறைவு ஏராளம் பிணிகளின் மூலக் காரணம், தூங்காமல் செயல்பட முடிவது இன்று சாதனை. ஆனால் அதுவே நாளைய தினம் பெருஞ்சோதனையாக மாறும்.

கற்றுக்கொள்ளுங்கள்
கற்றுக் கொள்வதற்கு பிறருடைய தராதரம் பார்க்கக் கூடாது. யார் சொல்கிறார்கள் என்பதையல்ல. அவர்கள் சொல்வது என்னவென்பதே முக்கியம்.  கற்றுக்கொள்வதற்கு சீனியர், ஜீனியர் என்று பார்க்கத் தேவையில்லை. ஞானிகளிடமிருந்து அறிய முடியாத சில நல்ல விஷயங்களை, சாதாரண போதைகளிடமிருந்து கூட கற்றுக் கொள்ள முடியும்.

பணத்தை சரியாகக் கையாளுங்கள்
பணம் ஒரு மருந்து போன்றது. அதை அளந்து உபயோகித்தால் வாழ்க்கையில் சுகம் வரும். அதனை அளவை மீறி உபயோகித்தால் வேதனையான சுகவீனங்களே ஏற்படும். பணத்தை அற்பமாக எண்ணி மிதிக்க நினையாதிருங்கள் அதனை மிக மேன்மையாக எண்ணி அதிக மரியாதை வைக்காதிருங்கள். பணத்தை உங்களுடைய வேலைக்காரனாக எண்ணுங்கள். அதனால் ஆளப்படும் விதமாக நீங்கள் அடிமையாகிவிடாதிருங்கள்.

முன்னேறுங்கள்
ஏழைக் குடும்பத்தில் பிறந்தது ஒருபோதும் வெட்கப்படவேண்டிய விஷயம் அல்ல. ஆனால் ஏழை என்ற நிலையைவிட்டு முன்னோக்கிச் செல்ல சரியான நடவடிக்கைகளை யோசித்து செயல்படாமலிருப்பதுதான் வெட்கப்பட வேண்டிய  விஷயம்.

தூய்மையான உடைகள்
தூய்மையான உடை உடுப்பபவர்கள் எல்லாரும் தூய்மையானவர்கள் அல்ல. ஆனால் உடைகளில் தூய்மையாயிராதவர்கள் மனதில் எவ்வளவு தூய்மையாயிருந்தாலும் அது நம்பப்படுவது கடினம். உங்களைக் குறித்த ஒரு நல்லெண்ணத்தை பிறருடைய மனதில் உருவாக்குவதில், உடைகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. உடை மட்டும் வெள்ளையாயிருந்தால் போதுமா?  என்று பிறர் கேட்க இடம் கொடுக்கக்கூடாது. அதுபோல உடையைக் கூட சுத்தமாக வைக்கத் தெரியலியே, இவர் எப்படி இருதயத்தை தூய்மையாக வைப்பார் என்று பிறர் பேசும் நிலை நல்லதல்ல.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Advice for Young Couple 
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் 
HomeFamily  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact