கவலை
பொ.ம.ராசமணி
Husband Wishes

எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள், எங்கே மழை பெய்து அறுவடையைக் கெடுத்து விடுமோ என்று ! நல்ல வேளை, கதிர் அறுப்புக் காலங்களில் நல்ல வெயில் அடித்தது. அறுவடை விறுவிறுப்பாக நடந்தது.
 
விதைக்க வேண்டிய காலத்தில் பெய்யாமலும் அறுக்க வேண்டிய காலத்தில் பெய்தும் மழை சில சமயம் கெடுப்பதுண்டு. அவ்விதக் கேடுகள் இல்லாமல் யாவும் சிறப்பாக நடை பெற்றதால் சிந்தாமணி உழவர்களுக்கு ஏகப்பட்ட உற்சாகம்.
 
எது எப்படியானாலும் அறுவடை ஆனதும்  புளியம்பட்டிக்குப் போய் காணிக்கை செலுத்துவது அந்த ஊரில் சில குடும்பங்களின் வழக்கம்.
 
 
சேவியர் தன் மகன்  பாக்கியத்திடம் ஒரு குலை வாழைப்பழம் கொடுத்து  ஆலயத்தில் போய் வைத்துவிட்டு வருமாறு கூறினார்.
 
ராயப்பரும் தன் மகன் பிச்சையிடம் ஒரு கட்டு கரும்பைக் கொடுத்து  ஆலயத்தில் போய் காணிக்கையாகக் கொடுத்து விட்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.
 
பாக்கியமும் பிச்சையாவும் சைக்கிளில் புளியம்பட்டி கிளம்பினர். நடுவே ஆறு கிலோ மீட்டர்.
 
இரண்டு கிலோமீட்டர் தூரம் போனதும் ஒரு சிறு வாய்க்காலைக் கடக்க வேண்டும். இருவரும் வாய்க்கால் பக்கம் வந்தனர். சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்தனர். வாய்க்காலில் ஏகப்பட்ட அயிரை! நீர் வற்றும் நேரமானதால் இங்குமங்கும் குறுக்குமறுக்காக ஒடிக் கொண்டிருந்தன.

பாக்கியம் பார்த்தான். “பிச்சை, துண்டை விரித்து அரித்தோமென்றால் ஆளுக்கு ரெண்டு கிலோ மீன் தேறும் போலிருக்கே! மீன்பிடிப்போமா?” என்று கேட்டான்.
 
பிச்சை, “வேண்டாம் பாக்கியம். வந்த வேலையைப் பார்ப்போம். இப்போ, போனால் எட்டு மணி ஆராதனைக்ககாவது போய்ச் சேரலாம்” என்று கூறி மீன் பிடிக்க மறுத்து விட்டான்.
 
பாக்கியம், “போடா, மேற்கே மடையை அடைச்சிருப்பான் போலே இருக்கு. அதுதான் இவ்வளவு மீன் வத்துப்பாட்டில் நெளிகிறது. கொஞ்சம் பொறுத்தால் எவனாவது அள்ளிக்கிட்டுப் போவான்.” என்று சொல்லிக் கொண்டே  தோள் துண்டை விரித்துக் போட்டு மீன் பிடிக்கத் தொடங்கினாhன்.
 
பிச்சை எதுவும பேசாமல்  ஆலயத்திற்கு விரைந்தான்.
 
அன்று மாலை மூன்று மணிக்கு இருவரும் சிந்தாமணி ஊர்ப் பொதுமடத்தருகில் சந்தித்துக் கொண்டார்கள். பாக்கியம், “டேய், ஆலயத்திற்கு என்று புறப்பட்டு வந்து மீன் பிடிக்க நின்றுகிட்டேனே! ஆராதனையைத் தவறவிட்டிடேனே  ஆராதனைக்கு வரலேங்கிற வருத்தம் கொஞ்சமா? எனக்கு ஒரேயடியா ஆலயத்தைப் பத்தியே நினைப்பு ஆராதனை எப்படிடா இருந்தது?”  என்று விசாரித்தான்.
 
பிச்சை, “எனக்கும் கோயிலுக்கு போகிற வரைக்கும் அயிரை நினைவு தான். பாஸ்டர் "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" என்ற தலைப்பில் மிகவும் தெளிவாக பேசினார். சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வு.  அன்று எனக்காகவே ஆண்டவர் இந்த வார்த்தைகளினால் பேசினார். முதல் தடவையாக அன்று தான் நான் பைபிளை திறந்து குறிப்பு எடுத்தேன். இந்த சம்பவத்தை உருவாக்கின தேவனுக்கு நன்றி.” என்றான்.