கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்
Pastor Victor Chelliah

இருபத்து மூன்றாம் சங்கீதம், நம் எல்லாருக்கும் தெரிந்த சங்கீதம். அதை மேய்ப்பனின் சங்கீதம் என்று சொல்வார்கள். அந்த சங்கீதத்தில் 3 காரியங்களை குறித்து நான் உங்களோடு கூட பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்,

தாவீது, ராஜா ஆவதற்கு முன், ஆடுகளை மேய்த்தவன். ஆடுகளின் மேய்ப்பனாக பழகினவன். வேதம் அவனை ஆட்டுக்கிட்டயிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டதாக சொல்லுகின்றது. ஆனால் அவனோ "நான் ஆடுகளை மேய்க்கின்றவன். ஆனால் ஆண்டவர் எனக்கு மேய்ப்பர்" என்று சொல்கிறான். மேய்ப்பன் என்றால் நடத்துகிறவர் என்று அர்த்தம்.  சிலர் "நான் என் அப்பா சொல்கிறபடிதான் செய்வேன்". வேறு சிலரோ ""நான் என் தலைவர் சொல்கிறபடிதான் செய்வேன்" என்று சொல்வார்கள். மற்ற சிலரோ, தான் இன்னார் சொல்கிறபடிதான் செய்வேன்" என்று சொல்வார்கள். ஆனால் எப்படிப் பட்ட மனிதரானாலும், எவ்வளவு பெரிய மனிதரானாலும் தவறு செய்யக்கூடியவர்கள்.  எந்த மனிதரும் பூரணமான மனிதர் அல்லர். மகாத்மா காந்தி தான் எழுதிய "சத்திய சோதனை" என்ற நூலில் "நான் மறைவான செய்த செயல்களுக்காக வெட்கப்ப்டுகிறேன்" என்று கூறுகிறார். அப்படி இருக்கும்போது, மகாத்மாக்களோ மற்ற தலைவர்களோ நம்முடைய வாழ்க்கையை நடத்தக்கூடாது.  ஆண்டவர் தான் நம்முடைய நம்முடைய வாழ்க்கையை நடத்த வேண்டும்.அப்பொழுது சங்கீதக்காரன் சொல்வதுபோல ஒரு குறைவும் படாது.


2. தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்

நாம் பயமுள்ள உலகத்தில் வாழ்கின்றோம். வியாதியை எடுத்து கொள்வோமென்றால், பெரிய வியாதியோ அல்லது சின்ன வியாதியோ என்று பயம். மருத்துவர் என்ன சொல்வாரோ என்று பயம்.  நாம் நடக்கும்போது வாகனம் வந்து மோதி விடுமோ என்று பயம். ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போது என்ன ஆகி விடுமே என்று பயம். ஆனால் தேவனுடைய பிள்ளைகள் நாம் பயப்பட தேவையில்லை. ஆண்டவர் உங்களோடு கூட இருப்பார் என்றால், வேதம்  "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்று  சொல்லுகின்றது. ஆகவே கர்த்தர் உங்கள் கூட இருக்கும் போது நீங்கள் பயப்பட தேவையில்லை. தாவீது ராஜாவின் வாழ்க்கையை பார்க்கும் போது, எத்தனையோ சத்துருக்கள், எத்தனையோ பிரச்சனைகள், ராஜவாகிய சவுலினால் பிரச்சனைகள், வனாந்திரத்தில் இருந்த போது ஒவ்வொரு நாளும் அவன் பயந்து ஜீவிக்கின்ற நிலையைலிருந்தாலும் அவன் சொல்கிறான், "தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்".  ஆம் பிரியமானவர்களே! நீங்கள் வாழும் தேசம் எங்கிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கு வேலை செய்தாலும் பரவாயில்லை. நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. தேவரீர் நம் கூட இருக்கும் போது நாம் பயப்பட தேவையில்லை.


3. அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

23ம் சங்கீதத்தில் தாவீது ராஜா இவ்வாறாக சொல்கிறான். "எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது". ஆண்டவர் நம்மை வழி நடத்துகிறவர் மட்டும் அல்ல. பயத்தை மாற்றுகிறவர் மட்டும் அல்ல. நம்மை எண்ணையால் அபிஷேகம் பண்ணுகிறவரும் கூட. இதற்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம் ஆனால், அநேக நோய்களுக்கு எண்ணெய் ஒரு  முக்கியமான மருந்து. தேவனுடைய அபிஷேக எண்ணையால்நிரப்பப்படும் போது உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும். , அதாவது  பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் போது உங்கள் வாழ்க்கை பரிபூரணமாயிருக்கும்.
 139ம் சங்கீதத்தில்  "நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்", என்று தாவீது ராஜா சொல்கிறான். இந்த அனுபவம் எப்படி உண்டாகும். ஆண்டவரை அறிந்திருப்பது மாத்திரம் அல்ல. அவர் பாதையில் நடப்பது மாத்திரம் அல்ல. உங்கள் வாழ்வே தேவனின் பிரசனனத்தினால் நிரப்பப்பட வேண்டும். அப்படி நிரப்பப் படும் போது உம்முடைய ஜீவியத்தில் சம்பவிக்கிறது என்னவென்றால், ஒரு நிரம்பி வழிகின்ற வாழ்க்கை. சந்தோஷமான வாழ்க்கை. அப்பொழுது தான் கடைசி வசனம் இப்படி சொல்கிறது.  "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்".  வேலையில்  இருந்தாலும், வீட்டில் இருந்தாலும் வசனங்களை தியானிக்கின்ற பிரசன்னம். காலையானாலும், இரவானாலும்   தேவனை நினைத்திருக்கின்ற பிரசன்னம். அப்படி ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் பாதத்தில் இருந்து, ஆண்டவரால் நிரப்பப் பட்டு, ஆண்டவரோடு கூட நடக்கும் போது உங்கள் வாழ்க்கை சம்பூரணமாயிருக்கும்; நிறைவாயிருக்கும்; தேவ கிருபையினால் நிரப்பப் பட்டிருக்கும்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.


 


Pastor Victor Chelliah is ministering Christian Assembly Mission Church, Chennai, India, A very good bible teacher who could be reached through email 'revvictor@gmail.com

Yesu Kappavar

Story of Lazarus

Yesu Kappavar

 
Home Family  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact