கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்……எபே – 4:26
குறிப்பிட்ட ஒரு விசுவாச சகோதரர் அற்பமான காரியங்களுக்காக விரைந்து கோபப்படுவார். சின்ன சின்ன விஷயங்கள் அவரை எரிச்சலடையச் செய்து விடும். ஒரு சின்ன மனவருத்தத்தைக்கூட உடனேயே பிரதிபலிக்காமல் இருக்க மாட்டார். ஆனால் கோபமடைந்தாலும், எரிச்சலடைந்தாலும் சற்று நேரத்தில் தன்னை உணர்ந்து மனம் வருந்தி தன்னை மாற்றிக் கொள்வார். தான் ஒரு உண்மையான விசுவாசியாக வாழ விரும்பியும் கோபம், எரிச்சல் ஆகிய விஷயங்களில் வெற்றியடைய முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு உண்டு. அவர் கோபப்படும் வேளையில், “இவர் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டவர் என்றால் ஏன் இந்த கோபம், எரிச்சல்?” என்று பிறரும் கேள்வி எழுப்புவதுண்டு. ஆனால் அவருக்கு சில ஹார்மோன் பிரச்சனைகள் இருப்பதும் அதனுடைய விளைவே கோபமும், எரிச்சலும் என்பது பின்னர் தெரியவந்தது.
சிலருக்கு மனவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாலும், சரீர இயற்கையின் தன்மைகளாலும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. நல்ல தேவ பக்தியுடைய விசுவாசிகளுக்கும் இவ்வித பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. எளிதில் கோபமடைதல், பய உணர்வடைதல், உணர்ச்சிவசப்படுதல், அவசரமாகப் பேசிவிடுதல், கவலைப்படுதல், பதட்டமடைதல், அற்ப காரியத்திற்காக மனக்காயடைதல், பாலுணர்வு சம்பந்தமான நினைவுகளால் தொந்தரவடைதல் போன்ற பல பிரச்சனைகள்
ஹார்மோன் சம்பந்தமான மற்றும் சரீர இயற்கையின் விளைவாக ஏற்படுவதுண்டு.
எனவே உணர்வு சார்ந்த இவ்விதப் பிரச்சனைகளைப் பார்த்து ஒருவரை தேவ உறவற்ற பாவி என எண்ணிவிடக்கூடாது. மேற்கண்டவைகள் ஆவிக்குரிய அனுபவம் இல்லை என்பதற்கான இறுதி அடையாளங்கள் அல்ல. இவைகள்யாவும் சற்று நேரம் தோன்றி மறைந்து போகிறவையே. ஹார்மோன் அதிகமாக அல்லது கொஞ்சமாக சுரப்பதின் விளைவாக இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும், ஒருவர் உண்மையான இறை உறவோடு வாழும்போது உடனேயே அவைகளை உணரவும் அவைகளுக்காக மனம் வருந்தவும் முடியும்.
கோபத்தை வைத்துக்கொண்டே இருக்கிறாரா, வெறுப்பை மறக்காமலே இருக்கிறாரா, தவறை உணராமலே இருக்கிறாரா, மன்னிக்க முடியாமலே இருக்கிறாரா, கவலையில் மூழ்கிப்போய் விடுகிறாரா, தான் செய்தது சரிதான் என்று சாதிக்கிறாரா, பாலுணர்வு நினைவுகள் சார்ந்து திட்டம் போடுகிறாரா. இது ஹார்மோன் பிரச்சனை அல்ல. இது தேவனற்ற பிரச்சனையே. இது பாவத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையடையாத பிரச்சனையே. இது இன்னும் மாம்சத்தின்படி செயல்படும் நிலையைவிட்டு நீங்கி வராத பிரச்சனையே.
தவறை உணரவிடாமலும், தவறுக்கு வருந்த விடாமலும், தன்னை சோதித்தறிய அனுமதிக்காமலும், தன்னை சரிசெய்ய விரும்பாமலும் இருக்கும் படியாக ஹார்மோன்கள் யாருக்கும் சுரக்காது. அது பாவத்தன்மை சுரப்பதின் அடையாளமே.