சொப்பனமாம் சொப்பனம்…..
அன்பு ஒளி
Reaching out people

எனது மூத்த மகன் குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது: மகன் விஞ்ஞானி, மருமகள் மருத்துவர். பல மாதங்களாகவே அன்புடன் அழைத்து கொண்டேயிருந்தனர். நானும் எனது மனைவியும், அவ்வழைப்பை, பல தடவை தட்டிக்கழித்து வந்தோம்! பின் பல மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ள ஜெபத்துடன் தீர்மானித்தோம்! தீர்மானித்தபோது, உள்ளத்தில் ஒர் நிறைவு, மன அமைதி தேவ நடத்துதலைக் கண்டோம்.

பாம்பே புறநகர்ப் பகுதியில்; வசிக்கும் எங்களுக்கு, எளிதாக விசா கிடைத்தது. எனது மகன் உடனடியாக எங்கள் இருவருக்கும் டிக்கெட் எடுத்து விட்டான். டிக்கெட் எங்கள் கையில் கிடைத்தவுடன், அதிக துரிதமாக மற்ற ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். எனது மருமகள் சொன்ன எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் பட்டியலைச் சீக்கிரம் வாங்கி முடித்தோம்! வீட்டிற்குத் தேவையான மசாலாப் பொருட்கள், எங்களது பேரப்பிள்ளைகள் இருவருக்கும், அவர்களின் விருப்பப்படி கேசட், CD, பண்டங்கள், துணிகள் எல்லாம் வாங்கி முடித்தோம்!

மறுநாள் புறப்பட வேண்டும், நண்பர்கள், உடன் ஊழியர்கள் வந்து வாழ்த்திச் சென்றனர்! சிலர் ஜெபித்து, பரிசும் கொடுத்துச் சென்றனர். இப்போது எனக்கும் எனது மனைவிக்கும் ஒரு புதிய பயம்! 21 வயதே முடிந்துள்ள, எங்கள் இளைய மகன் பிரகாஷ், நாங்கள் தனியே விட்டுச் செல்வதால் தன்னைப் பத்திரமாய் காத்துகொள்வானா? தனது M.Sc. பயிற்சியை ஒழுங்காக முடிப்பானா? நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்ட பெயர் வாங்கிவிடுவானா? ஏன்ற பல்வேறு பயங்கள்…..

முந்தின இரவு அதிக நேரம் அவனோடு பேசினோம்! நாங்கள் சொன்ன ஆலோசனை களையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தான். “சரி, சரி” என்றான். எங்களுக்கு அதிக மகி;ழ்ச்சி,  மறு நாள் அதிகாலை பாம்பே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டோம், அன்றே, ஒரு இடைவேளைக்குப் பின் சுமார் 20 மணி நேரத்தில், ஆஸ்திரேலியாவில் எனது மகன் இடத்திற்குச் சென்று அடைந்தோம். அங்கு புதுப்புது அனுபவங்கள்! எனது மூத்த மகன் பிரேம், மருமகள், இரண்டு குட்டிபிள்ளைகளுக்கும் ஒரே மகிழ்ச்சி! வீடு சேர்ந்தவுடன், ஜெபித்து, பத்திரமான பிரயாணத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினோம், உடனே மகன் பிரகாஷ்க்கு, பாம்பேக்கு போன் பண்ணினோம். அவனுக்கும் அதிக மகிழ்ச்சி! 3 மாதங்கள் ஆஸ்திரேலிய அனுபவம்…. புது நண்பர்கள்…புதிய ஊழிய வாய்ப்புகள்…

ஓர் இரவு…கனவு ஒன்றைக் கண்டு விழித்துக் கொண்டேன். தூக்கம் கலைந்தது.….நாங்கள் வீடு திரும்பும்போது….என் மகன் பிரகாஷ், குடி போதையில்;, பைத்தியம் பிடித்தவன் போல் உட்கார்ந்திருப்பதாகவும், அவனைப் பிடித்து அடித்து, “ஏன் இப்படி உனனை கெடுத்துக் கொண்டாய்…? என்று கதறி அழுவது போல ….ஓர் கனவு…எழுந்து உட்கார்ந்தவுடன், ஒரு கணம் திகைத்து விட்டேன் சமாதானத்தை இழந்து விட்டேன்; என் மனைவியை எழுப்பி சொல்ல வேண்டும் என எண்ணினேன்; ஆனால், ஜெபித்து மறுபடியும் படுக்கைக்குச் சென்றேன்! தூங்கியும் விட்டேன்!

மறுநாள் ….இக்கனவே என் கண் முன்னால் அடிக்கடி வந்தது…! எனது சமாதானம் சின்னாபின்னாமாகச் சிதறியது! என்ன செய்வதென்று தெரியாமல்… குழப்பத்திற்குள்ளானேன். திடீரென்று… ஓர் உணர்வு  என் மனதில் எழுந்தது. தேவன் உணர்த்துவது போல உணர்ந்தேன் “என்னிடம்தானே உன் மகன் பிரகாஷை விட்டு ஆஸ்திரேலியா புறப்பட்டாய்! உன் மகனை பாதுகாக்க முடியாது என்று உன்னிடம் வந்து சொல்வேனா? !’ இந்த சிறிய உணர்வு ஓர் பெரிய அற்புதத்தை என்னில் உண்டாக்கியது….உடனே அறைக்குள் சென்றேன். முழங்காலிட்டேன்!

“என் பிதாவே, உம்மிடம் பொறுப்பு தந்து விட்டுத்தான் நாங்கள் இத்தூர தேசத்திற்கு வந்தோம்! நீர் பாதுகாத்துக் கொள்ள வல்லவர். நான் இதனை நம்புகிறேன்! இக்கனவைத் தந்தது நீர் அல்ல! என் சமாதானத்தைக் குலைக்க திட்டமிட்ட எதிராளியே இதனைத் தந்துள்ளான். ஆகவே உம் நாமத்திலே, பிசாசை எதிர்க்கிறேன்” என்று ஜெபித்தவுடன், மறுபடியும் ஒரு பெரிய சமாதானம்! மகிழ்ச்சி! மனநிறைவு! உடனே போன் பண்ணி பிரகாஷோடு பேசினேன். புத்திரமாக, மகிழ்ச்சியோடு இருப்பதாகக் கூறினான்.

சுமார் 5 மாதங்கள் கழித்து வீடு திரும்பினோம்… அதே பிரகாஷ்! முகத்திலே மகிழ்ச்சி! அன்புடன் எங்களை வரவேற்றான். கனவில் பார்த்தது போல எந்தக் காரியமும் கிடையாது. அல்லேலூயா!

கனவுகைளக் கண்டதினால்…. கலங்கி நிற்கும் தாயே! தகப்பனாரே! வாலிபரே! உங்கள் சமாதானத்தைக் குலைக்க எதிராளி வைத்துள்ள சதித்திட்டமே இக்கனவுகள்! தேவன் தான் எழுதி வைத்துள்ள தனது வார்த்தையை நிறைவேற்ற முடியாதா? அவர் கைவிடும் கர்த்தர் அல்லவே.

வசனத்திற்கு முழு இடம் கொடாதபடி சொப்பனங்களையும், யாரோ சொல்லும் எதிர்கால கூற்றுகளையும் நம்பி சமாதானத்தை துலைத்து விட்ட நண்பரே! அவைகளை எதிர்த்து நில்லுங்கள்! தேவனுடைய வார்த்தைகளைச் சார்ந்து கொள்ளுங்கள்! எதிராளியின் வேலை, சமாதானத்தை குலைப்பதுவே.

“அநேக சொப்பனங்கள் மாயையாயிருக்கும் அநேக வார்த்தைகளும், வியர்த்தமாயிருக்கும், ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு” (பிரசங்கி 5:7)

டாக்டர். ராஜேந்திரன், நியூ பாம்பே        


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Yesu Kappavar

Story of Lazarus

Yesu Kappavar

 
Home Family  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact