தேவன் அளந்த அளவு
சகோ. சாம்சன் பால்
Reaching out people

யாத்ராகமம்-16:1-24
1 தீமோத் - 6:1-12

போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்…. - தீமோ – 6:6

கானகத்தில் பயணம் செய்த இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் அற்புதகரமாக மன்னா என்ற உணவினை தினமும் கொடுக்க முன்வந்தார். ஆனால் அந்த மன்னா பொழியப்படும்போது அவரவர் அந்த நாளுக்குரிய தேவையின் அளவிற்கு மட்டுமே அதனைச் சேர்க்க வேண்டும். நாளைய தினத்திற்கு தேவையானதை நாளைய தினம் தருவார் என்ற நல்ல நம்பிக்கையுடன் அவர்கள் இருக்கவேண்டும்.

ஆயினும் அவர்களில் சிலர் ஆவல் மிகுதியாலும், அதிக ஆசையின் தூண்டுதலினாலும் தேவைக்கு அதிகமாகச் சேர்த்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு பயன்படவில்லை. அது கெட்டுப் போய் நாற்றம் அடிக்க ஆரம்பித்தது.

தேவனை அறிந்து விசுவாசித்து வாழ்கின்ற எவரும் தேவன் நம் தேவைகளைத் தருவார் என்ற விசுவாசத்துடனும் வாழவேண்டும். ஆண்டவரின் நியாயங்களின் வழியில் நடந்து, அவருக்குப் பிரியமானதை செய்கின்ற சூழ்நிலையில் அவர் எவ்வளவு நமக்கு அளிக்கின்றாரோ அது போதும் என எண்ணவேண்டும்.

நாளைய தினத்திற்கு ஒரு அடித்தளத்தையும், பாதுகாப்பு சூழலையும்     இன்றே உருவாக்கவேண்டாமா என்ற ஆதங்கத்தில் அதிகமானவைகளை அடைய வேண்டும், சேர்க்க வேண்டும் என்று சென்றால் அது அதிக மன்னா சேர்த்த கதையாகவே இருக்கும். தேவனுடைய வழிகளில் நடந்து, அவருடைய பிரமாணங்களைப் பின்பற்றி வாழ்கின்றபோது கர்த்தர் நமக்கு எவைகளை தருகின்றாரோ அவைகள் நமக்கு போதுமானவைகளே.

ஆனால் அவைகளோடு திருப்தியடையாமல் அதிகம் சேர்ப்பதிலே ஆர்வம் கொண்டால் அது யாரையும் உலகத்திற்கேற்ற வழிகளிலேயே நினைத்ததை அடைந்திடத் தூண்டும். சத்தியத்திற்கும், உண்மைக்கும் புறம்பாகப் போக அவை கட்டாயப்படுத்தும். அதனுடைய துவக்கம் மனதிற்கு அற்ப மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் முடிவோ வேறுவிதமாக இருக்கும்.

குறிப்பிட்ட குடும்பத்தில் கணவன் மனைவிக்கென நல்ல வருமானம் தருகின்ற உத்தியோகம் இருந்தது. அதிகப்பொருள் ஈட்டும் ஆசை மனைவியை அயல்நாட்டிற்கு அனுப்பி வைக்க கணவனைத் தூண்டியது. பணம் ஏராளம் வந்தது. ஆனால் கணவர் வழி தவற நேரிட்டது. அவருடைய பராமரிப்பில் இருந்த பிள்ளைகளும் ஒழுக்கக்கேடுகளில் விழ நேரிட்டது.
 
ஆம். தேவன் அளந்த அளவுகளிலே திருப்திபட்டு வாழ்கின்ற வாழ்க்கையே ஆசீர்வாத உத்தரவாதம் உடையது. “போதும்” என்ற விசுவாசம் சார்ந்த வாழ்க்கையே, என்றும் தேவனால் நம்முடைய வாழ்க்கையில் அற்புதங்களையும் அதிசயமான வழி நடத்துதல்களைம் காணச் செய்யும்.

 


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Yesu Kappavar

Story of Lazarus

Yesu Kappavar

 
Home Family  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact