தேசமே, பயப்படாதே
அன்பு ஒளி
Reaching out people

நான் ஒரு தனியார் கம்பெனியில் Accountant ஆக நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன். நல்ல சம்பளம் இருந்தாலும் கூட எனக்கு நிம்மதி, சமாதானம், சந்தோஷம் இல்லை. இதன் மத்தியில் கடன் தொல்லை. நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போது முழு நேர ஊழியத்திற்கென்று ஒப்புக்கொடுத்திருந்தேன். அதன் பிறகு 6 ஆண்டுகள் கழித்து கர்த்தர் என்னை “யாரை நான் அனுப்புவேன்”  (ஏசாயா 6-8)  என்ற வசனத்தின் மூலம் ஊழியத்திற்கு அழைத்தார். இந்த அழைப்பிற்கு இணங்கி என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிறுவர் ஊழியத்தில் இணைந்து ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். “இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங் 127.5) என்ற வசனத்தின்படி அந்த மாதமே என்னுடைய மனைவி கர்ப்பமாய் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் உறுதிப்படுத்தினார்.

ஒரு பக்கம் சந்தோஷம்! மறுபக்கம் கவலை ? “இனி பணத்திற்கு என்ன செய்வது? செலவு இனி கூடுதலாகுமே?” என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் ஏற்கனவே கூறினபடியே ஊழியத்திற்கு வருகிறதற்கு முன்பு தலைக்கு மேல் கடன். இந்த பாரமும் என்னை அழுத்த ஆரம்பித்தது. ஒரு நாள் ஒரு சகோதரன் என்னை அழைத்து “இதற்கு முன்பு வேலை செய்த கம்பெனியில் எவ்வளவு கடன் இருக்கிறது?’ என்று கேட்டார். நான் கடன் தொகையை கூறினேன். என் கையில் ரூ. 2000த்தை கொடுத்து “முதலில் கடனை அடைத்துவிட்டுவா” என்றார். இன்னொரு நெருங்கிய நண்பர் வீட்டிற்கு சென்றேன். உடனே ஒரு செக் கொடுத்தார். ஆதில் 500, அல்லது 1000 ரூபாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ரூ.3000 இருந்தது. இந்த பணமெல்லாம் என் கடனை அடைக்க உதவியாக இருந்தது. கர்த்தர் பெரிய காரியங்களை செய்தார்.

“கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும் ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக் கொடுத்த தினமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள்”.  (நியா: 5.2)

என் மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் செக்கப் செய்ய வேண்டும். செலவுக்கு என்ன செய்வது என்று திகைத்தேன். டிசம்பர் மாதம் என் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பரிசு கவர் கொடுத்தார்கள். ஒரு சிறிய ஜெபம் செய்துவிட்டு அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்தேன். ரூ.500 இருந்தது. அந்த மாத மருத்துவ செலவிற்கு உதவியாக இருந்தது.

“ஜனவரி மாதம் என்ன செய்வதென்று” யோசித்தேன். எங்கள் இயக்கத்தில் ஒரு மாநாடு நடந்தது. அங்கு கவர் கொடுத்தார்கள். பிரித்து பார்த்தேன். ரூ.500 இருந்தது.

அடுத்த மாதமும் என்ன செய்ய என்ற சிந்தனையில் இருந்தேன். நாங்கள் ஊழியர்களும், volunteer-களுமாக சேர்ந்து நெய்வேலியில் ஒரு கூட்டம் முடித்துவிட்டு வேனில் திரும்பி கொண்டிருந்தோம். அன்று எனக்கு பிறந்த நாள்! யாரிடமும் கூறவில்லை. ஆனாலும் அங்கிருந்தவர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு வேனிலேயே ஒரு பெரிய கேக்கை வெட்டி கொண்டாடினார்கள். முடிவில் ஒரு கவரை நீட்டினார்கள். பிரித்து பார்த்தேன். ஆ, இது என்ன கனவா? இல்லை நினைவா? அதிலும் ரூ.500 இருந்தது. உள்ளத்தில் பெருமகிழ்ச்சி தேவனை துதித்தேன். இவர் எவ்வளவு அதிசயமானவர்.

“தேசமே, பயப்படாதே, கர்த்தர் காரியங்களைச் செய்வார்”  (யோவேல் 2:21)


இன்னும் வருகின்ற மாதங்களில் கர்த்தர் அதிசயங்களை செய்வாரென்று விசுவாசத்தோடு காத்திருக்கிறேன்.
(சகோ. குணசீலன், வேலூர்)

அன்பு நண்பரே! இந்த தேவன் பெரிய காரியங்களை நேற்று செய்தார்! இன்னும செய்கிறார்! நாளையும் கண்டிப்பாய்ச் செய்வார். நீங்கள் மாத்திரம் சோர்ந்து, செயல் இழந்து விடாதிருக்க அவரைத் தேடுங்கள். சேவியுங்கள்.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Yesu Kappavar

Story of Lazarus

Yesu Kappavar

 
Home Family  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact