குறையும் கணவரின் குடும்ப நேரம்
திருமதி ஹெலன் ஜேக்கப்
Husband not Spending time

கேள்வி-பதில் பகுதி

கேள்வி


எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றது. இரண்டு குழந்தைகள். நல்ல  உத்தியோகத்தில் என் கணவர், பார்ட் டைம் ஜாப்பில் நான்,என எங்களது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. என் கணவர் ஊழியங்களிலும் பயங்கர ஈடுபாடு. 1 அல்லது 2 மணி நேரம் ஒரு நாளைக்கு குடும்பத்திற்கென்று செலவழித்தாலே பெரிது. இதற்கிடையில், நான் மேலே படிக்க போகின்றேன் என்று சொல்லிக் கொண்டிருகின்றார். அப்படி போனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது அவரால் முடியாமல் போய்விடும். அவரிடம் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை.

உங்கள் ஆலோசனைக்காக எதிர்பார்க்கும், எஸ்தர் சுந்தரி லோகச்சந்தர், திருநிறையூர்.

பதில்

அன்புள்ள சகோதரிக்கு,

அன்பின் மொழிகள் ஐந்து உள்ளது. அதாவது அன்பை வெளிப்படுத்தும் முறைகள். உங்கள் அன்பின் மொழி “தரமான நேரத்தை ஒதுக்குவது” என்று நினைக்கின்றேன்.

உங்கள் கணவர் வேலைக்கும்,  ஊழியத்திற்கும் நேரத்தை செலவழிக்கிறார். ஆனால் என்னுடனோ ,  பிள்ளைகளுடனோ நேரத்தை செலவழிப்பதில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு.

1. உங்கள் கணவர் மாத்திரம் அல்ல ,  அநேக ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு வேலையை செய்து முடிப்பது ஒருவித திருப்பதியைத் தரும்.

2. அவர் ,  என் மனைவி,  பிள்ளைகளுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கி கொடுப்பது,  குடும்பத்துக்காக உழைப்பதுதான் அன்பு என்று நினைக்கின்றார். நீங்கள் உங்களுடன் நேரம் செலவழிப்பது தான் அன்பு என்று நினைக்கின்றீர்கள்.

3. உங்கள் பிரச்சனை புரிந்து கொள்ளுதலின் பிரச்சனையே தவிர ,  அன்பு பிரச்சனை அல்ல. அவர் உங்களை நேசிக்கிறார்.

4. நீங்கள் அவரிடம் மனம் திறந்துப் பேசுங்கள். அவர் உங்களுடன் நேரம் செலவழிக்கும் போது அது உங்களுக்கு எவ்வளவு மகிழ்சியையும்,  திருப்தியையும்  தருகிறது என்பதை பொறுமையாக விளக்குங்கள்.

5. அவர் படிப்பதற்கு அனுமதியுங்கள். ஆனால் சில நிபந்தனைகளை முன் வையுங்கள். ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகளோ அல்லது வாரத்தில் ஒரு நாளோ ( அது எந்த நாள் என்று தீர்மானிக்க வேண்டும்)  குடும்பத்துக்காக ஒதுக்கச் சொல்லுங்கள். “ குடும்ப நேரம்” என்பது மிகவும் முக்கியமானது.

6. அவர் அதை புரிந்துக் கொண்டு மாறும் வரை பொறுமையாக இருங்கள்.  சண்டை போடாதீர்கள். அவருக்காக ஜெபியுங்கள்.

7. முடிந்தால் அவருடன் ஊழியத்திற்கு செல்லுங்கள். அதுவும் அவருடன் நீங்கள் செலவு செய்யும் நேரமாக இருக்கலாமே. 

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

உங்கள் சகோதரி

ஹெலன் ஜேக்கப்

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)


திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர். 'மணக்கும் மணவாழ்வு' என்ற திருமண உறவைப்பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வரும் இவரை 91-979-089-5366 ( இந்தியா ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.